×

திருச்சி கலெக்டர் தகவல் திருவானைக்காவல் கோயிலில் சுவாமி-அம்பாள் மாறுவேடத்தில் பஞ்சப்பிரகார விழா

திருச்சி, ஏப். 7: சைவத் திருத்தலங்களில் முக்கியமானதும், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் – அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 18ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 23ம்தேதி நடைபெற்றது. இதனையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதன் தொடர்ச்சியாக பஞ்சப்பிரகார விழா நேற்று (6ம் தேதி) நடைபெற்றது. படைப்புத் தொழிலை செய்துவரும் பிரம்மா மனசஞ்சலத்தால் ஏற்பட்ட தவறினால் கடும்சாபத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டார். இவர் சாபவிமோசனம் வேண்டி பல சிவாலயங்களில் சிவனை வழிபட்டு வந்தார்.

அதற்குரிய காலம் வரும் போது திருவானைக்காவலில் சாபவிமோசனம் அளிப்பதாக சிவபெருமான் கூறினார். இதனால் பிரம்மா திருவானைக்காவலில் ஒரு குளத்தை ஏற்படுத்தி அதன் கரையில் தங்கி கடும் தவம் இருந்து வந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் சாபவிமோசனம் அளிக்க கைலாயத்தில் புறப்பட்ட போது பார்வதியும் தானும் உடன் வருவதாக கூற இருவரும் திருவானைக்காவலுக்கு வந்தனர். மனச்சஞ்சலத்தால் சாபம் பெற்ற பிரம்மாவினை சோதிக்கும் வகையில் சிவபெருமான் பெண்வேடத்திலும், பார்வதி ஆண் வேடத்திலும் மாறுவேடத்தில் வந்தனர். ஏற்கனவெ தனது தவறான செயலால் மனக்கவலையில் இருந்த பிரம்மன் மிகவும் வருந்தி சிவபெருமானை வணங்கினான். இதை பார்த்த சிவபெருமானும், பார்வதியும் பிரம்மாவிற்கு சாபவிமோசனம் அளித்தனர். இந்த புராண முக்கியத்துவம் வாய்ந்த இச்சம்பவமே பஞ்சப்பிரகார நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடக்கிறது.

அதுசமயம் சுவாமி பெண்வேடத்திலும், அம்பாள் ஆண் வேடத்திலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் 5 பிரகாரங்களையும் பஞ்சமூர்த்திகள் வலம் வருவதால் இந்த விழாவிற்கு பஞ்சப்பிரகார விழா என அழைக்கப்படுகிறது. இந்தாண்டு பஞ்சப்பிரகார விழா நேற்று (6ம்தேதி) நடைபெற்றது. இதனை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி மஞ்ச வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து அருள்பாலித்தனர். இந்தாண்டு ஆகமவிதிப்படி திருவீதி உலா நடைபெறவில்லை. தொடர்ந்து இன்று விடையாற்றியும் நாளை (8ம் தேதி) மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post திருச்சி கலெக்டர் தகவல் திருவானைக்காவல் கோயிலில் சுவாமி-அம்பாள் மாறுவேடத்தில் பஞ்சப்பிரகார விழா appeared first on Dinakaran.

Tags : Trichy Collector Information Panchaprakhara ,Swami-Ambal ,Thiruvanaikaval Temple ,Thiruvanaikaval Jambukeswarar ,Akilandeswari ,Saivite ,Trichy Collector Information Panchaprakara ceremony ,Swami ,Ambal ,
× RELATED அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற...